Monday, April 17, 2006

எப்போதும்போலத்தான்...


ஒரு மாதிரிதான் வருகின்றன
எல்லா தொலைபேசி அழைப்புகளும்
விருப்பு வெறுப்புகள் எதுவுமின்றி...
பின்பு ஒரு பட்டன் அழுத்தலில்
நடந்தேறும் இணைப்பும் துண்டிப்பும்!
இணைந்திருந்தவை துண்டிக்கப்பட்டதாகவும்
துண்டிக்கப்பட்டவை இணைந்ததாகவும்
இணைப்பும் துண்டிப்புக்குமான
இடைவெளி நிரம்பும்!
அப்பாவுக்கு மண் என்றும்
அம்மாவுக்கு மண்ணெண்ணை என்றும்
அந்த இடைவெளியில் தீர்மானிக்கப்பட்டதுதான்
அகண்ட வீதி இடைவெளியாய் இருக்கக்கூடும்
காற்றில் கலந்து விடாவண்ணம்
மனிதச்சொல் சேகரித்து
மீண்டும், மீண்டும்
ஒரு மாதிரிதான் வருகின்றன
எல்லா தொலைபேசி அழைப்புகளும்!

Monday, April 10, 2006

ஒரு சொல் பொய்!










நீலமாய் வானம் உடைந்து விழுந்ததாய்
பார்த்தவர்கள் பேசிக்கொண்டார்கள்
அந்தத் துண்டுகள்
வானத்தினுடையதுதானென்றும்
அந்த நீலம்
மிகவும் பரிச்சயமானதென்பதுமாய்
அவர்களின் பேச்சு இருந்தது!
வானம் உடைந்து போனதாய்
அவர்கள் அழவும் செய்தனர்!
பின்பு வானம் குறித்தான
வழிப்போக்கன் பேச்சு
அவர்களை கோபம் கொள்ளச்செய்தது
வழிப்போக்கன் கேட்டான்:

1) வானம் நீலம் என்று யார் சொன்னது?
2) வானத்தின் உண்மையான இருப்பு என்ன?

Friday, February 18, 2005

வருகை

நினைவுகளில் நித்தம் இருந்தாலும்
நிதர்சனத்தில் என் வருகை நிகழ்ந்தபோது
தோட்டம் இறந்து கிடந்தது!
தெரிந்த முகங்களைத் தேடவேண்டியிருந்தது
தென்பட்டவைகளில் சுயத்தின் சாயல்
முகமூடிகள் என்னவோ அழகாய்தானிருந்தன
முழுதாய் இரசிக்கத்தான் முடியவில்லை!
தாய் சுரந்து அகம் வளர்ந்தது
இரப்பர் சுரந்து புறம் வளர்த்தது
மனம் இலயிக்கவில்லை ஏனோ
இரப்பர் மனிதங்களை புதைத்துத் துளிர்த்த
செம்பனைத் தழுவல்களில்!
மெல்லிய தூறலின்போது
நாசி வழி உணரமுடிந்தது
மண்ணும் மரணித்துக்கொண்டிருப்பதை!
அகோரமாய் ஓலமிட்டு பின்
அமைதிகண்டது மனம்
மீண்டும் இனி நிகழக்கூடும்
திவச தினங்களில் மட்டும்
தோட்டத்திற்கான என் வருகை!
(திசைகள், அக்டோபர் 2004)

அழிவதும் ஆவதும்...

அப்போதெல்லாம் அம்மாவின் தலை
யானைத் தோலை நினைவுபடுத்தியது!
புற்று என்று மருத்துவர் விளக்கினார்...
முட்டி பால் குடித்த முலையை
முதலில் அது அரிந்துகொண்டது!
கொஞ்சமும் நரைத்திராத மயிர்களை
கற்றையாய் பிடுங்கிக் கொண்டு
உயிருக்கு கொஞ்சம்
உத்திரவாதம் கொடுத்தது!
மிகமெதுவாய்தான்
கரைத்து... கரைத்து...
முழுவதுமாய் காலாவதியாக்கி
தீயிட்டு கொளுத்தச்சொன்னது!
என் அப்புறமான நிமிடங்களின்
நிகழ்வாக்கம் குறித்து
மொத்தமும் ரசனையிழக்கச்செய்தது!
பிறகு இன்னொரு
கவிதை எழுதவிக்க போய்விட்டது!
(திசைகள், பிப்ரவரி 2005)

காற்று போல...

உருவகப்படுத்தல் கொடுக்கும்
சௌகரியங்கள் எனக்கு பிடித்திருந்தன!
காற்று போல ஆனபட்சத்தில்....
குசலம் விசாரிக்க
அம்மாவிடம் போய்வர முடியும்...
மண்வாசம் நுகர
தோட்டம் வலம்வர முடியும்...
ஒருசேர
கோவில், பள்ளிவாசல், தேவாலய
தரிசனம் தேடிப்போக முடியும்....
காற்று போல இருக்கத்தான் ஆசை!
நிதர்சனத்தில்
காற்றடைத்த பையாய்...

சுக்ரன்

சுக்ரன் படம் பார்த்தேன். அது நல்ல படமா இல்லையா என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். விஜய்க்கு இருக்கும் நல்ல பெயரை அவர் அப்பா சந்திரசேகரே கெடுத்து விடுவார் போலிருக்கிறது.

தமிழில் ஆங்காங்கே நல்ல படங்களுக்கான முயற்சிகள் தென்பட்டாலும், இது போன்ற படங்களும்......

கோலிவூட்டில் நல்ல படங்களுக்கு வறட்சி ஏற்பட்டால், அதை நாம் இங்கே மலேசியாவில் போக்குவோம்.

ஒரு நம்பிக்கைதான்!

Wednesday, February 16, 2005

சிலரோடு என் தனிமைகள்!

இன்னும் தொடருகின்றன
திருடு போகும் என்
தனிமைகளுக்கான தேடல்...
தீநாக்குகள் புசிக்குமுன்
அரைகுறையாய் விழித்திரையில்
சிறைப்படுத்தியதும்;
கபாலம் நொறுங்கியதில்
அலங்கோல தொடைச்சதை
அலங்காரத்திலும்;
வெந்தொழிந்தது குடல்தான்
வேறொன்றுமில்லை என்பதாய்
சலனமற்றிருந்ததுமான;
மூன்று முகங்களின் வளியற்ற வெளிகளில்
மீண்டும், மீண்டும்,
கரைந்து கொண்டேயிருக்கின்றன
என் தனிமைகள்!

உறக்கம் கொள்ளாத பொழுதுகளில்...

எதையெதையோ நினைத்துக்கொள்கிறான்
உறக்கம் கொள்ளாத பொழுதுகளில்...
ஆங்கிலப் படத்தின் பிதுங்கிய மார்புக்காரி
பழைய காதலியுடனான சில்மிசங்கள்
நண்பனின் காதலியோடு ஓடிப்போன
இன்னொரு நண்பன்
உடைந்த கண்ணாடி சில்லுகளில் தோன்றும்
தோட்டத்தின் பிம்பம்
பாம்பு கடித்ததாய் பகல் தூக்கக் கனவு
எதிர்காலத்தின் சூன்யம்
நிகழ்காலத்தின் விரக்தி
நெருக்கமாய் இன்னொரு மனிதனின் தேவை
இப்படியாய்...
மனைவியை இழந்துவிட்ட
அப்பாவின் நினைவுகளை
நெட்டித்தள்ளியபடியே!

இன்னமும்....

அம்மா மடிக்கும்
நீள்சதுர வடிவிலான
வெற்றிலை அளவில்
ஒரு முட்டைத்துண்டு
சோற்றுக்குவியலில்
தேடிப்பார்த்தால் கிடைக்கும்
ஒன்றிரண்டு நெத்திலிகள்
கொஞ்சம் காரம்
மழைநனைத்த கட்டிப்பால் நாற்றம்
நிறைய கொசுக்கடி....
அந்த இருபது காசு ‘நாசி லெமாக்‘
இன்னமும் திருடிக்கொள்கிறது
குளிர்சாதன அறையில்
சுடச்சுட மனைவி பரிமாறும்
உணவின் சுவையை!

மோனத்தவம்

காதல் கலைத்துப்போட்டதை
மறுபடி அதனதன் இருப்பில்
கிடத்திப்பார்த்ததில்
ஆண்மையின் மரபணுக்கள்
உணர்த்தும் பெண்மைத்தேடலும்
பெண்மையின் மென்மையில்
உறைந்துகிடக்கும் ஆண்மைத்தேடலும்
மொழிகளற்று சன்னமாக அதிர்வதை
அமைதியாய் உணர முடிகிறது!

மழைகணங்கள்

இன்றும் வரவில்லை
நேற்றும் அதற்கு முந்தினமும் கூட...
நாளையும் அதற்குப் பிறகும்
வருவதும் நிச்சயமில்லை!
இருந்தும் மனம் ஏங்கும்...
மழை நனைத்த வேளைகளில்
தலை துவட்டி அணைத்துக்கொள்ளும்
அம்மாவின் நினைவுகளுக்காக...